கோவை : நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செல்வபுரம் குடியிருப்பை பராமரிக்க கடிதம் அனுப்பி ஆறு மாதங்களாகியும், மாநகராட்சியின் மெத்தனத்தால் அடிப்படை வசதிகளின்றி அங்கு வசிப்போர் அவதிப்படுகின்றனர்.கோவை மாநகராட்சி, 78வது வார்டு, செல்வபுரம் ஐ.யு.டி.பி., காலனியில், 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் மறுகட்டுமானம் செய்யப்பட்ட, 288 மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கூடுதலாக கட்டப்பட்ட, 240 குடியிருப்புகள் என, 528 குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ளது.மூன்று ஆண்டு இழுபறிக்கு பிறகு, 95 சதவீதம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், 2022ம் ஆண்டு டிச., மாதம் தமிழக முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இக்குடியிருப்பு கட்டடத்தை திறந்து வைத்தார். குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக அங்கு வசிப்போர் இன்றும் ஏங்குகின்றனர்.இந்நிலையில் கடந்தாண்டு செப்., 9ம் தேதி வாரியத்தின் நிர்வாக பொறியாளர் சார்பில் குடிநீர் குழாய், ரோடு, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை, மாநகராட்சி சொத்து பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்குமாறு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.இக்குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு, சொத்து வரி விதித்து பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. கடிதம் அனுப்பி ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை மாநகராட்சி கண்டுகொள்ளாததால், அங்கு வசிப்பவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். நாங்களே அழைக்கிறோம்
ஐ.யு.டி.பி., காலனி திட்டப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் காட்டுதுரை கூறுகையில், ''மாநகராட்சியிடம் எங்களுக்கு வரி போடுமாறு நடையாய் நடக்கிறோம்; இதுவரை வரி விதிக்கவில்லை. குடிநீர் தட்டுப்பாடு, சாக்கடை, பாதாள சாக்கடை அடைப்பு என எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன. கழிவுநீரை நாங்கள் பணம் கொடுத்து அகற்றி வருகிறோம். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என்றார். ஒப்படைக்கவில்லை!
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாரியம் தரப்பில் இருந்து இன்னும் எங்களிடம் ஒப்படைக்கவில்லை. அவர்கள் குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கி பராமரிப்பதற்கென்று தனி அரசாணை இருப்பதாக, வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் ஏதேனும் புகார்கள் வந்தால் சரி செய்து வருகிறோம். எங்களிடம் முழுமையாக ஒப்படைத்தால்தான் ரோடு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்' என்றார்.
'கட்டாயம் பேசுகிறேன்!'
வாரியத்தின் கோவை கோட்ட நிர்வாக பொறியாளர் மாடசாமி கூறுகையில், ''பராமரிப்பு குறித்து மாநகராட்சிக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்குடியிருப்புதாரர்களிடம் வரி விதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி உதவி கமிஷனரிடம் கட்டாயம் பேசுகிறேன்,'' என்றார்.