உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜூன் 10ல் கொப்பரை கொள்முதல் நிறைவு கலெக்டர் கிராந்திகுமார் தகவல்

ஜூன் 10ல் கொப்பரை கொள்முதல் நிறைவு கலெக்டர் கிராந்திகுமார் தகவல்

கோவை : கோவை மாவட்டத்தில் ஜூன், 10ல் கொப்பரை கொள்முதல் நிறைவடைய இருப்பதாக, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.111.60க்கும், பந்து கொப்பரை ரூ.120க்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பாண்டு மார்ச், 14ல் கொள்முதல் துவக்கப்பட்டது.அன்னுார், ஆனைமலை, கோவை, பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, காரமடை, செஞ்சேரி மலையடிபாளையம், சூலுார் மற்றும் தொண்டாமுத்துாரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. 31 ஆயிரத்து, 500 மெட்ரிக் டன் கொப்பரை, 800 மெட்ரிக் டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு நகல், உற்பத்தி சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள விற்பனை கூடங்களை அணுகலாம். ஜூன், 10ல் கொப்பரை கொள்முதல் நிறைவடைய இருப்பதால், விவசாயிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !