கோவை':கோவை அவிநாசி சாலை கருமத்தம்பட்டி நான்கு சாலை சந்திப்பில், நானூறு அடி தூரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை, நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கருமத்தம்பட்டி நான்கு சாலை சந்திப்புக்கு அருகே உள்ள, ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி வாகன மற்றும் மக்கள் போக்குவரத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2023ம் ஆண்டு, கருமத்தம்பட்டி எலச்சிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் வழக்கு தொடர்ந்தார்.அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், கோவை மாவட்ட நிர்வாகம், கோவை தெற்கு கோட்டாட்சியர், சூலுார் தாலுகா தாசில்தார் ஐகோர்ட்டில் பதிலளிக்க வேண்டும் என்று, கோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனரும், துணை பொது மேலாளருமான செந்தில்குமார், கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.இதையடுத்து, கடந்த ஜூலை 25ல், ஐகோர்ட் தனது மறு உத்தரவில், 'கருமத்தம்பட்டி நான்கு சாலை சந்திப்புக்கு அருகே உள்ள, சர்வே எண், 285ல் தற்போது குடியிருக்கும் உரிமையாளர்களை விசாரித்து, அவர்களிடமுள்ள ஆவணங்களை சரிபார்த்து, தற்போதைய நிலையை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, நெடுஞ்சாலைத்துறை ஆணையரக திட்ட இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளது. கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக டெப்போவிலிருந்து, 800 மீட்டர் தொலைவுக்கு சாலை குறுகியதன் காரணமாக ஏற்பட்ட விளைவுதான் இந்த விவகாரம்.இதை அதிகாரிகள் முழுமையாக, விசாரணை செய்து தற்போதைய மார்க்கெட் மதிப்பீட்டுக்கு ஏற்ற நல்லதொரு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று, நில உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.