உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி புகார்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி புகார்

அன்னுார்: அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நான்கு மாதங்களுக்கு பிறகு கடந்த 26ம் தேதி நடந்தது. கூட்டம் துவங்கிய போது அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 106 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அல்லப்பாளையத்தில் ஆசிரியர் குடியிருப்பு கட்டடம், அ. மேட்டுப்பாளையத்தில் நடுநிலைப்பள்ளி கட்டடம், செம்மாணி செட்டிபாளையத்தில் அங்கன்வாடி கட்டடம் என பல இடங்களில் அபாய நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.கான்கிரீட் சாலை அமைத்தல் கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட 16 பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. 106 தீர்மானங்களும் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபு பேசுகையில்,எனது வார்டில் அங்கன்வாடி கட்டடம் பள்ளி கட்டடம் இடிப்பது குறித்து தகவல் தெரிவிப்பதில்லை.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்த பகுதியில் உள்ள ஒன்றிய கவுன்சிலர்களை தொடர்பு கொள்வதில்லை. அதிகாரி ஆய்வுக்கு வரும் போதும் தகவல் தெரிவிப்பதில்லை. பணிகள் மெத்தனமாக நடக்கிறது. மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை, என்றார்.பா.ஜ., கவுன்சிலர் ஜெயபால் பேசுகையில், எட்டு ஊராட்சிகளின் செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சில ஊராட்சிகளில் அதிகாரிகள் தன்னிச்சையாக ஊராட்சி செயலர்களை மாற்றியுள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்களை அதிகாரிகள் பொருட்படுத்துவது இல்லை. அத்திக்கடவு திட்டம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளால் கதவுகரை சாலை சேதமாகி விட்டது.தற்போது வாகனங்கள் செல்ல சிரமமாக இருக்கிறது. புதிதாக சாலை அமைக்க வேண்டும், என்றார். பொறியாளர் பதிலளிக்கையில், சாலை அமைத்து ஐந்து ஆண்டுகள் முடிந்திருந்தால் மட்டுமே மீண்டும் அமைக்க முடியும், என்றார்.பா.ஜ., கவுன்சிலர் லோகநாயகி பேசுகையில்,குருக்களையம்பாளையத்தில் ரேஷன் கடை கட்டும் பணி மாவட்ட கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. விரைவில் முடிக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, என்றார்.கவுன்சிலர்கள் பேசுகையில், எங்களது பதவி காலம் முடிவதற்கு ஐந்து மாதங்களே உள்ளது. அதிலும் கடைசி இரண்டு மாதங்கள் தேர்தல் பணி துவங்கிவிடும்.எனவே பணிகளுக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும். மதிப்பீடு தயாரித்து டெண்டர் விட வேண்டும், என்றனர். சேர்மன் அம்பாள் பழனிசாமி பேசுகையில், சில பணிகளுக்கான பில்களில் விதிமீறல் உள்ளது. ஒப்பந்ததாரர் செய்த பணிக்கு அதிகாரிகள் பெயரில் காசோலை வழங்கப்படுகிறது இதை சரி செய்ய வேண்டும், என்றார்.'ஒன்றிய கூட்டத்திற்கு வருவாய் துறை, போக்குவரத்து வேளாண்துறை என முக்கியத் துறைகளில் இருந்து ஒருவர் கூட வரவில்லை. ஒன்றிய அலுவலகத்தின் பாதி அலுவலர்கள் வரவில்லை. ஒன்றிய கூட்டத்தை அலட்சியப்படுத்துகின்றனர் என, கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் தங்கமணி, சந்திரகலா, அலுவலக மேலாளர் பிரபுராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொர்ணவேலம்மாள் பாக்கியசாமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி