பொள்ளாச்சி:கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து நீர் வினியோகம் செய்யப்படுகிறது. நான்கு மண்டலமாக பிரித்து, ஆண்டுக்கு இரு மண்டலத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில், முதலாம் மண்டல பாசனம் முடிந்து, மூன்று மாதங்களாகிய நிலையில், காண்டூர் கால்வாய் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து, பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டுமென, வெள்ளக்கோவில், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது:கட்டுமானத்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், 13 ஆண்டுகளாக காண்டூர் கால்வாய் பணி ஆண்டுதோறும் நடைபெற்றுக்கொண்டே உள்ளது. கடந்த முறை இரண்டு சுற்று தண்ணீரை விட்டுக்கொடுத்தும், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை காலங்களில் அணைகள் நிரம்பினாலும், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.தற்போது, பருவமழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், பணிகளை நிறுத்தி, ஆக., 1ம் தேதி இரண்டாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, பி.ஏ.பி., நீர்வளத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, ஆக., 8ம் தேதிக்குள் பணிகளை முடித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தபின், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.