| ADDED : ஜூலை 11, 2024 10:01 PM
கிணத்துக்கடவு, - கிணத்துக்கடவு, மூலக்கடை பகுதியில் பழங்குடியின மக்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கையன்புதூரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு 627 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், மூலக்கடை பகுதியை சேர்ந்த, 130 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 70 ரேஷன் கார்டுகள் பழங்குடியின மக்களுடையது.மூலக்கடை பகுதியில் இருந்து, சிங்கையன்புதூரில் உள்ள ரேஷன் கடைக்கு, இந்த 130 ரேஷன் கார்டு பயனாளர்களும், 4 கி.மீ., தூரம் வந்து செல்லும் நிலை உள்ளது. பழங்குடியின மக்கள், ரேஷன் பொருட்கள் பெற்று செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, பழங்குடியின மக்கள் குடியிருப்பு அருகே உள்ள பல்நோக்கு மையத்தில், பகுதி நேர ரேஷன் கடை துவங்கினால், மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கு, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.