UPDATED : ஆக 23, 2024 03:04 AM | ADDED : ஆக 23, 2024 12:41 AM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை நீர் வடிந்து செல்ல குழாய் பதிக்காததால், மழை பெய்யும் போது அருவி போல தண்ணீர் கொட்டுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ., பிரிவிலிருந்து ஜோதிபுரம் வரை, 1.65 கி.மீ., தூரம், 115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 2020ல் தொடங்கிய பணி கடந்த ஆண்டு நிறைவு பெற்று போக்குவரத்து துவங்கியது.மேம்பாலத்தில் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர், பாலத்திலிருந்து வெளியேற பாலத்தின் இரு பக்கங்களிலும் துளை அமைத்து, அதில் இருந்து குழாய் வாயிலாக தண்ணீரை வெளியேற்றுவது வழக்கம். ஆனால், பாலம் கட்டும்போது மழை நீர் வெளியேற இரண்டு பகுதிகளிலும் துளைகள் மட்டும் உள்ளன. குழாய் பொருத்தப்படாததால், மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர், மேம்பாலத்தில் இருந்து அருவி போல பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் கொட்டுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ' மேம்பாலத்தின் இறங்கு பகுதியில் வாகனங்கள் இறங்கி செல்ல சிரமம் உள்ளது. மேலும், மேம்பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மழை பெய்யும் போது பாலத்தில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. இதை தவிர்க்க குழாய் அமைத்து, அதை வடிகாலுடன் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.