பொள்ளாச்சி:பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே, கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பையை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அதில், தபால் அலுவலகம், காந்தி சிலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.அவ்வகையில், தபால் அலுவலகம் எதிரேயுள்ள ரோட்டில் விரிவாக்கப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.இதனால், தபால் அலுவலகம் ஒட்டிய காலி இடத்தில், கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரம் பாதிக்கிறது. அப்பகுதியில், ரோடு விரிவாக்கப்பணி மேற்கொண்டு, அதற்கேற்ப வாகனங்கள் 'பார்க்கிங்' அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் கூறியதாவது:தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே, அதிகப்படியான அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதனால், அதிகப்படியானவர்கள், தங்களின் அத்தியாவசிய தேவைக்கு, தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.ஆனால், முறையான 'பார்க்கிங்' வசதி இல்லாததால், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திச்செல்வதை மக்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.பகலில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தபால் அலுவலகம் ரோட்டில், விரிவாக்கப்பணியை முடிக்காவிட்டாலும், அங்குள்ள குப்பைக்கழிவுளை அகற்றி, வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்றாற்போல், இடவசதி ஏற்படுத்த வேண்டும். குப்பையால் சுகாதாரம் பாதிக்கிறது. குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.