உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையால் சுகாதார சீர்கேடு; எம்.எல்.ஏ., அதிருப்தி! மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் புகார்

குப்பையால் சுகாதார சீர்கேடு; எம்.எல்.ஏ., அதிருப்தி! மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் புகார்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், ஆங்காங்கே மூட்டை, மூட்டையாக குப்பை தேங்கி கிடப்பதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அதிருப்தியடைந்த பொள்ளாச்சி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், வணிக வளாகங்கள் அதிகளவு நிறைந்து, வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.நகரில் குப்பை அகற்றுதல், சாக்கடை கால்வாய் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடக்கின்றன. ஆங்காங்கேமூட்டை, மூட்டையாக குப்பை தேங்கி கிடப்பதால் நகரத்தின் சுகாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.நகராட்சியில், குடியிருப்பு பகுதிக்கு, 30 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம், 50 ரூபாய் வீதம், மாதம் தோறும் குப்பை எடுக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வணிக நிறுவனத்துக்கேற்ப இந்த வரி அதிகரித்து வசூலிக்கப்படுகிறது.ஆனால், நகரின் துாய்மையை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

கலெக்டருக்கு புகார்

எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா ஆகியோருக்கும், நகராட்சி நிர்வாகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:கடந்த சில நாட்களுக்கு முன், பொள்ளாச்சி நகரத்தில் குப்பை அள்ளாமல் நகரம் முழுவதும் குப்பை குவிந்து கிடப்பது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து குப்பை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின், மூன்று நாட்கள் குப்பை அள்ளப்பட்டது.தற்போது, கடந்த, 20 நாட்களாக குப்பை அள்ளாமல் மக்கள் கூடுகின்ற இடங்களில் குவிந்து கிடக்கிறது. பொள்ளாச்சி நகரம், கேரளா மாநில எல்லை அருகே இருக்கிறது. தற்போது, பருவமழை துவங்கி சில நாட்களாக பெய்கிறது. இந்நிலையில், குப்பை அள்ளாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மேலும், டைபாய்டு, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள், பொதுமக்களுக்கு பரவக்கூடிய அபாயமான சூழ்நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நகரம் முழுவதும் தேங்கி இருக்கும் குப்பையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை