கோவை : ''இரு மாதங்களில் சத்தி ரோடு விரிவாக்கப்பணிகள் துவங்கும்,'' என, கலெக்டர் கிராந்திகுமார் கூறினார்.கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல், சரவணம்பட்டி வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த ரோட்டை பயன்படுத்தும் பலரும் தினமும், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில், கணபதி வேலன் தியேட்டரிலிருந்து, சூர்யா மருத்துவமனை வரை ரோடு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக நகர ஊரமைப்பு துறையிடம் நிதி கோரப்பட்டது. இதற்கான நிதியை வழங்க மாநகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, ரோடு விரிவாக்கம் குறித்து கோவை எம்.பி., ராஜ்குமார், கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். டெக்ஸ்டூல் பாலம் அருகில், கணபதி பஸ் ஸ்டாண்ட், சூர்யா மருத்துவமனை, சி.எம்.எஸ்., பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணையின்படி, விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பாலம் கட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்படும். முதற்கட்டமாக, இந்த விரிவாக்கப்பணிகள் நடக்க உள்ளன. சூர்யா மருத்துவமனையில் இருந்து சரவணம்பட்டி வரை, ஆறு வழிப்பாதை அமைக்கும் திட்டம் உள்ளது. அதற்கான பணிகள் இதனுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும். இரு மாதங்களில், விரிவாக்கப்பணிகள் துவங்கும்,'' என்றார்.