கோவை;பார்லி.,யில் செங்கோல் வைத்திருப்பது, பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளம் எனக் கூறிய எம்.பி., வெங்கடேசன், மதுரை பெண் மேயருக்கு செங்கோல் கொடுத்தது ஏன் என, போட்டோவைக் காட்டி, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:லோக்சபாவில் பேசிய எம்.பி., வெங்கடேசன், செங்கோல் என்பது பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளம் என்றார். இதே, வெங்கடேசன், மதுரை பெண் மேயர் இந்திராணிக்கு செங்கோல் கொடுத்திருக்கிறார். (அதற்கான புகைப்பட ஆதாரத்தை தனது மொபைல் போனில் காட்டினார்). இதற்கு, இந்தப் பெண் மேயரை அடிமைப்படுத்தியதாக அர்த்தமா? நீங்கள் செங்கோலைக் கையில் பிடிக்கலாம்; அது தவறில்லை. இதுவே, மோடி, பார்லியில் செங்கோல் வைத்தால் அது தவறு. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை. தி.மு.க., நம்மைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, வெங்கடேசன் பேசும் கருத்து கொஞ்சமும் ஏற்புடையது இல்லை. யார் பிற்போக்குத்தனமான அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். தாய்மொழிதான் முக்கியம்
தேசிய கல்விக் கொள்கையில், 2020ல் தாய்மொழிதான் பிரதானமாக இருக்க வேண்டும் என முதன்முறையாகக் கூறினோம். தமிழக அரசு இத்தனை காலம் கழித்து விழித்துக் கொண்டு, மாநிலக் கல்விக் கொள்கையில், இப்போது அதையே அறிவித்துள்ளது.வகுப்பறைகளில் நவீனத் தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி, செயல்திறன் மிக்க கல்வி (கிரிட்டிகல் திங்கிங்), நூலகம், முன்னாள் மாணவர்களுடன் உறவைப் பேணுதல், ஏ.இ.சி., தொழிற்பயிற்சி, பாலின சமத்துவம், புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி, விளையாட்டு என, ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளதைத்தான், மாநிலக் கொள்கையில் சேர்த்துள்ளனர். உருது பள்ளிகள் வேண்டுமாம்
ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம் எனக் கூறிவிட்டு உருது பள்ளிகளை துவக்குவது குறித்து, மாநில கல்விக் கொள்கை பற்றி பேசுகிறது. மதராஸாவில் கற்பிக்கும் பாடங்களை, பட்டப்படிப்புகளை ராணுவம், சிவில், வங்கித் தேர்வுகளில் அங்கீகரிக்க வேண்டும் என, மாநில அரசின் கல்விக் கொள்கை கூறுகிறது. இதை மக்களை பார்த்துக் கொள்ளட்டும்.கல்வி மத்தியப் பட்டியலா, மாநிலப் பட்டியலா என்பது குறித்து விவாதிக்கலாம்; தவறில்லை. ஆனால், இதுவரை, புதிய கல்விக் கொள்கையில் என்ன தவறு என்றே அவர்கள் கூறவில்லை. அரசியலமைப்புச் சட்டத்துடன் எப்படி முரண்படுகிறது எனக் கூறவில்லை. தமிழகத்துக்கு மூன்று முதல்வர்கள்
தி.மு.க., ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில், விலைவாசி உயர்ந்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகரித்துள்ளன. கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு மட்டும் மூன்று முதல்வர்கள். ஒன்று வாங்கினால் ரெண்டு ப்ரீ. மகன் ப்ரீ, மருமகன் ப்ரீ. ஒரு கோப்பில் கையெழுத்து வாங்க, ஈ.சி.ஆரில் சபரீசன், அண்ணா நகரில் கார்த்திக், பிறகு உதயநிதியைப் பார்க்க வேண்டும்.மேயர் முட்டாளாக இருந்தால்தான், உதயநிதியை புத்திசாலியாக காட்ட முடியும். செயல்படாத மேயரை மாற்றுகிறோம் எனக் கூறி, நான்கு மேயர்களை தி.மு.க., மாற்றப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை.இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழக அரசின் குலக்கல்வி
''பயிற்சி மையங்களைத் தடை செய்ய வேண்டும் என மாநில அரசு கூறுகிறது. அரசுப் பள்ளிகளை ஒழுங்காக நடத்தினால், அவர்கள் ஏன் தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்கின்றனர்?கடலோரப் பகுதிகளில் பயிலும் குழந்தைகள் படகு, கப்பல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, மீனவ சமுதாய மாணவர்களுக்கு கடல் சார்ந்து 11ம் வகுப்பில் கற்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குலக்கல்வி இல்லையா? இத்தனை முரண்பாடுகளுடன், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை காப்பி அடித்துள்ளனர்,'' என்றார் அண்ணாமலை.
'டில்லியிலும் கொத்தடிமைகள்'
லோக்சபாவில் ராகுல் பேசிய பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''ராகுலுக்கு வாய் இருக்கிறது. லோக்சபாவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதற்குக் கை தட்ட தி.மு.க.,வில் கொத்தடிமைகள் இருப்பதைப் போல, அங்கும் கொத்தடிமைகள் இருக்கின்றனர். அவர் பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.ஹிந்து தாய் தந்தைக்குப் பிறந்து, குல தெய்வ கோவிலில் கிடாய் வெட்டி, மொட்டை அடித்து அந்த சம்பிரதாயத்தில் வந்த நாங்கள், ஹிந்துவைப் பற்றிப் பேச உரிமை இருக்கிறதா அல்லது ராகுலின் பாரம்பரியத்தில் வந்த ஒருவருக்கு பேச உரிமை இருக்கிறதா?,'' என்றார் அண்ணாமலை.