பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம், டி.எஸ்.ஏ., நகர் தோட்டத்துச்சாலையை சேர்ந்தவர் தளபதி, 71. இவரது தோட்டத்தில் பாறை வெடிக்க பயன்படுத்தும் வெடிமருந்துகள் வைத்துள்ளதாக, ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில், அனுமதியின்றி சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்து, அரசு அனுமதி பெறாமல் பாறை உடைத்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும், கெட்டிமல்லன்புதுாரை சேர்ந்த ராமசாமி, 50, கம்ப்ரசர் டிராக்டர் பயன்படுத்தி வெடிப்பதற்கான ஒயர்களை, குழி தோண்டி புதைப்பதற்காக உதவியது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், 950 ஜெலட்டின் குச்சிகள், 170 டெட்டனேட்டர், 170 வெடிமருந்து குப்பிகள் மற்றும் கம்ப்ரசர் டிராக்டரை பறிமுதல் செய்தனர். உடுமலையை சேர்ந்த செல்வராஜ், வெடிமருந்து சப்ளை செய்ததாக தெரியவந்துள்ளது. ஆனால், முழு விபரங்களை தெரிவிக்காமல், போலீசார் மறைத்தனர். இதன் பின்னணியில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கணபதிபாளையத்தில் தளபதி தோட்டத்தில் ஏற்கனவே, அனுமதியின்றி பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. கடந்த நவ., மாதம் ஆய்வு செய்து, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் வருவாய்த்துறையிடம் கிணறு வெட்ட மற்றும் பாறை உடைக்க அனுமதி பெறவில்லை. இதுபற்றி ஆனைமலை போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
அனுமதியற்ற குவாரி?
ஆனைமலை பகுதிகளில் விவசாய நிலத்தில், சட்ட விரோதமாக கல் உடைத்து, கேரளாவுக்கு எடுத்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன. கடந்த ஜன., மாதம் பொள்ளாச்சி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள், கல் குவாரி, கிரஷர் உரிமையாளர் சங்கம் சார்பில், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக - கேரளா எல்லையொட்டியுள்ள கணபதிபாளையத்தில், தோட்டத்தில் இருந்து குவாரி போன்று பாறை வெட்டி கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.