பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், நடுரோட்டில், 'ஆப்' ஆகி நின்ற அரசு பஸ்சை, மாணவர்கள், பயணியர் தள்ளி 'ஸ்டார்ட் செய்தனர்.பொள்ளாச்சியில் இருந்து, கிராமப்புறங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. முறையாக பராமரிக்கப்படாத பஸ்கள், அவ்வப்போது, நடுரோட்டில் பழுதாகி நிற்பதும் வாடிக்கையாக உள்ளது.கடந்த, 1ம் தேதி, பஸ் ஸ்டாண்டில் புறப்பட்ட '51ஏ' அரசு டவுன் பஸ், திருவள்ளுவர் திடல் அருகே திடீரென 'ஆப்' ஆனது. ஓட்டுநர், பஸ்சை 'ஸ்டார்ட்' செய்ய முயன்றும் பலனிக்கவில்லை.'செல்ப் மோட்டார்' பிரச்னை காரணமாக, நடுரோட்டிலேயே பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணித்த மாணவர்கள், அப்பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்., கட்சியினர் சேர்ந்து, பஸ்சை தள்ளி 'ஸ்டார்ட்' செய்ய உதவினர். இதையடுத்து, அந்த பஸ், அங்கிருந்து புறப்பட்டது.பயணியர் கூறுகையில், 'பஸ்சில், 'செல்ப் மோட்டார்' பிரச்னை காரணமாக, பஸ் ஸ்டாண்டில் சில பஸ்கள், இன்ஜின் இயக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. பயணியர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகின்றனர். பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்,' என்றனர்.