| ADDED : ஜூலை 19, 2024 11:07 PM
கோவை:காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கு, சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை, 10 வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 278 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், சிறப்பு பயிற்சி முகாம் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அவர்களுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மேன்பட்டு இருக்கிறதா என்று ஆராய்ந்து, அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.அந்த கருவியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றும், பெற்றோர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி முகாமை, மருத்துவமனை டீன் நிர்மலா துவக்கி வைத்து அக்குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். இந்த முகாமில் காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவித்திறன் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.