| ADDED : மே 23, 2024 11:05 PM
மேட்டுப்பாளையம்:பல ஆண்டுகளாக உழவு செய்யாமல் உள்ள தரிசு நிலங்களை, உழவு செய்து விவசாய நிலங்களாக மாற்ற, அரசு மானியம் வழங்குகிறது என, உதவி வேளாண் இயக்குனர் பாக்கியலட்சுமி அறிவித்துள்ளார். காரமடை வட்டாரத்தில் கடந்த, 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் சாகுபடி செய்யாமல், தரிசாக உள்ள நிலங்களின் பரப்பளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாதிரியான தரிசு நிலங்களை, பல்வேறு காரணங்களால் விவசாயிகள் உழவு செய்யாமல் விடுவதால், தரிசாக உள்ளது. எனவே விவசாயிகளை ஊக்குவித்து, தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற, வேளாண் துறையால் மானியம் வழங்கப்படுகிறது.எனவே இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தங்களது விபரங்களை உழவன் செயலியில் பதிந்து, அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி, பயன்பெற வேண்டும். மேலும் நிலத்தில் ஈரப்பதம் உள்ளதாலும், தற்போது பெய்யும் மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்தால், மண் இறுக்கம் தளர்ந்து மண்ணுயிர்கள் பெருக வழிவகை கிடைக்கும். கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத் திட்டங்களில் மானியம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற முன்வர வேண்டும். மேலும் உழவன் செயலியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும். இவ்வாறு காரமடை வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி அறிக்கையில் கூறியுள்ளார்.