உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் பாதுகாப்புக்கு வந்த வாகனம் தீயணைப்பு துறையினர் விளக்கம்

முதல்வர் பாதுகாப்புக்கு வந்த வாகனம் தீயணைப்பு துறையினர் விளக்கம்

கோவை:முதல்வர் பாதுகாப்புக்கு வந்த வாகனம் குறித்து தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.கோவையில் கடந்த, 15ம் தேதி முப்பெரும் விழா கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் கோவை வந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.பீளமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனமும் விமான நிலையத்திற்கு பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த தீயணைப்பு வாகனத்தின் முன் சக்கரம் விரிசல் ஏற்பட்டு பழுது ஆகும் நிலையில் இருந்தது. முதல்வரின் பாதுகாப்புக்கே ஓட்டை உடைசல் வண்டி தான் வந்திருக்கு என சமூக வலைதளங்களில் பரவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தீயணைப்பு வாகனங்களின் டயர்கள், 35 முதல், 40 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய பின் கழிவு செய்யப்படும். அதேபோல இந்த டயரும் வாகன பரிசோதனை துறையிடம் காண்பிக்கப்பட்டு கழிவு செய்ய உத்தரவு பெறப்பட்டது. ஆனால் புது டயர் சென்னையில் இருந்து இன்னும் வராததால், வாகனத்தின் டயர் மாற்றப்படவில்லை.ஓரிரு நாட்களில் புது டயர் வந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள டயர் மேலும் சில கிலோ மீட்டர் பயன்படுத்தலாம் என வாகன பரிசோதனையாளர் தெரிவித்ததால் வாகனத்தை ஓட்டி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !