கோவை. : கோவையில் குடித்து விட்டு, பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்குவோரால், ரோட்டில் நடக்கும் மக்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற ஆபத்தான நிலை உருவாகி வருகிறது.கோவை, காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்டில், நேற்று காலையில் நடந்த விபத்து, நகருக்குள் நடமாடுவதற்கே மக்களுக்கு அச்சப்படும் ஒரு அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நேற்று காலை 11:30 மணிக்கு, 'மீனாட்சி' என்ற பெயருடைய ஏழாம் நம்பர் டவுன் பஸ்சை 'ரிவர்ஸ்' எடுத்தபோது, பின்னால் கடந்து சென்ற சிவகுமார், 40 என்பவர், இரு பஸ்களுக்கு இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போதையில் டிரைவர்
விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை, மக்கள் இறக்கிப் பார்த்தபோது, அவர் முழு போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அதைப் பார்த்த மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் ஆவேசமாக அவரை அடித்துத் துவைத்து, போலீசில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த டிரைவர், பட்டணத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 45 என்பது தெரியவந்துள்ளது.நேற்று இந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால், இதே டிரைவர், நகரின் பரபரப்பான வீதிகளில் பஸ்சை ஒட்டிக் கொண்டு சென்றிருப்பார். இதே டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியேதான், தினமும் பகலும், இரவுமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து ரோட்டைக் கடக்கின்றனர். அந்த கூட்டத்துக்கிடையே பஸ்சை இயக்கியிருந்தால் என்னவாயிருக்குமென்றே கற்பனை செய்ய முடியவில்லை.இந்த விபத்தினால், பட்டப்பகலில் டிரைவர் குடிபோதையில் பஸ் ஓட்டுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதேபோல, கோவை நகருக்குள் தனியார் பஸ்கள் மற்றும் லாரிகளை இயக்கும் டிரைவர்கள் குடித்து விட்டு, வாகனத்தை இயக்குவது சர்வசாதாரணமாக நடக்கிறது. தனிநபர் வாகனங்களை விட, இத்தகைய வண்டிகளை குடித்து விட்டு ஓட்டுவது பேராபத்தில் முடியும் அபாயம் அதிகமுள்ளது.சில நாட்களுக்கு முன்பு, வடவள்ளி-துடியலுார் இடையே இயக்கப்படும் மினிபஸ்சை தாறுமாறாக ஓட்டியதைப் பிடித்த போலீசார், அந்த டிரைவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, லைசென்சை பறிமுதல் செய்தனர். ஆனால் காங்., கவுன்சிலராகவுள்ள அந்த மினிபஸ் உரிமையாளர், அந்த அபராதத்தையே செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.அதேபோல, கடந்த ஆண்டில், ஒரு தனியார் பள்ளி பஸ்சை ஓட்டிய டிரைவர் ஒருவர், காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரத்திலேயே, போதை அதிகமாகி, நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டுத் துாங்கிய கொடுமையும் கோவையில் நடந்தது. கோவை நகருக்குள் நடக்கும் பல விபத்துக்களின் பின்னணியில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதே காரணமாகத் தெரியவந்துள்ளது. ரத்து செய்ய வேண்டும்
வெளியூர்களுக்கான பல்வேறு வழித்தடங்களில், தனியார் பஸ்களை இயக்கும் டிரைவர்கள் சிலரும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாக புகார்கள் வருகின்றன. கோவை நகரில் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் பஸ்களை இயக்குவதற்கும், ஹாரனை அலறவிட்டுச் செல்வதற்கும் குடிபோதையில் வண்டி ஓட்டுவதும் முக்கியக் காரணமாகத் தெரிகிறது.தனிநபர் வாகனங்களை நிறுத்தி, 'ஆல்கஹால் டெஸ்டர்' சோதனைகளை மேற்கொள்ளும் போலீசாரும், ஆர்.டி.ஓ., அலுவலர்களும், மக்கள் போக்குவரத்துக்குரிய இந்த வாகனங்களின் டிரைவர்களையும் 'ப்ரீத் அனலைசர்' வைத்து சோதிக்க வேண்டும்; குடித்திருந்தால் கடும் தண்டனை தருவது மிக மிக முக்கியம்.குறைவான ஊதியத்தில் வேலை செய்கிறார்கள் என்பதற்காக, தனியார் பஸ் உரிமையாளர்களும் இத்தகைய டிரைவர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும். கலெக்டரும் இதில் கவனமெடுத்து, குடிபோதையில் இயக்கப்படும் பஸ்களின் பெர்மிட்டையும் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் குடிப்பவன் கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதும், குடிக்காதவன் அநியாயமாய் உயிரிழப்பதும் அன்றாடம் நடக்கும்! ''இனி பஸ் டிரைவர்களும் பரிசோதிக்கப்படுவர்!''கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் கூறுகையில், ''தனியார் மற்றும் போக்குவரத்து வாகனம் எதுவாயிருப்பினும் போதையில் இயக்குவது மிகத்தவறு. போக்குவரத்துத்துறையினரும், போக்குவரத்து போலீசாரும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களையே அதிகம் சோதனை செய்கின்றனர் என்பது உண்மைதான். இனிமேல், மக்கள் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கும் டிரைவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதற்குரிய அறிவுறுத்தல், கோவை சரகத்திலுள்ள அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் அனுப்பப்படும்.'' என்றார்.