கோவை;நகரின் பல்வேறு பகுதிகளிலும், ஆட்களை விழுங்க காத்திருக்கின்றன, சாக்கடை கால்வாய் குழிகள். இவற்றை எப்போதோ மூடியிருக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், தற்போது நுாறடி ரோட்டில் மூடப்படாமல் இருந்த ஒரு பாதாள சாக்கடை குழியில் விழுந்து, ஒரு பெண் காயமடைந்த பின், அவசரம் அவசரமாக குழிகளை தேடிப்பிடித்து மூடத்துவங்கியுள்ளது.கடந்த மார்ச் மாதம், கோவை வரதராஜபுரம் பகுதியில் திறந்திருந்த சாக்கடை கால்வாய்க்குள் வாலிபர் ஒருவர், பைக்குடன் விழுந்ததில் படுகாயமடைந்தார். இப்போது இதோ நேற்று முன் தினம், கோவை காந்திபுரம், 100 அடி ரோட்டில் நடந்து சென்ற ஒரு பெண், திறந்திருந்த பாதாள சாக்கடை கால்வாய் குழியில் விழுந்தார். எழ முடியாமல் தவித்த அவரை, பொதுமக்கள் கைதுாக்கி விட்டு காப்பாற்றினர்.கோவையின் பல்வேறு பகுதிகளிலும், இதுபோன்ற சாக்கடை கால்வாய் குழிகள் மூடப்படாமல், ஆட்களை விழுங்க காத்திருக்கின்றன. தினமும், பல ஆயிரம் வாகனங்கள் சென்று வரும், புரூக்பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, நஞ்சப்பா ரோட்டில் பாலத்தின் கீழ் பகுதி, கோவை தடாகம் ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்களால் அபாயம் உள்ளது. இதுதவிர, பல்வேறு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய் குழிகளின் மூடிகள் உடைந்து காணப்படுகின்றன. இப்படி திறந்து கிடக்கும் சாக்கடை குழிகளுக்கு, பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர், அவரை முறையாக கண்காணிக்க தவறிய அதிகாரிகள் என இரு தரப்பினருமே இதற்கு காரணகர்த்தாக்கள். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கும், இவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
பொதுமக்கள் சாடல்
மாநகராட்சியின் நடவடிக்கையை, சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.n சாக்கடை மூடிகளை திறந்து போட்டால், அதில் மக்கள் விழுந்து அடிபடுவர் எனத் தெரிந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல், மாநகராட்சி கமிஷனர் என்ன செய்து கொண்டிருந்தார்?n ஒரு ஆள் குழியில் விழுந்தால் தான் வேலை நடக்குமா?n முதலிலேயே ஏன் செய்யவில்லை?இவ்வாறு பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.