உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படுமோசமானது ரோடு; ஓட்டுநர்கள் திக் திக் பயணம்! மேற்கு புறவழிச்சாலை அமையுமா, அமையாதா?

படுமோசமானது ரோடு; ஓட்டுநர்கள் திக் திக் பயணம்! மேற்கு புறவழிச்சாலை அமையுமா, அமையாதா?

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி நகரில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த, மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.மொத்தம், 73 கோடியே, 35 லட்சம் நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இப்பணிகள் அவ்வப்போது மேற்கொள்வதும், பிறகு கைவிடுவதுமாக உள்ளனர். இப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மிக மந்தமாக நடப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரோடெல்லாம் குழி

பொள்ளாச்சி அடுத்துள்ள, நல்லுார், நகராட்சி குப்பை கிடங்குக்கு பாலக்காடு ரோட்டில் இருந்து செல்லும் ரோடு சந்திப்பு பகுதி, ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் ரோடு, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகம் செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ரோடு பள்ளமாக மாறி விபத்துக்கு அச்சாரம் போடுகிறது.அதேபோன்று, வடக்கிபாளையம் ரோட்டில் இருந்து ஆர்.பொன்னாபுரம் செல்லும் ரோடும் மேற்கு புறவழிச்சாலைக்காக தோண்டி போடப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் ரோடு அமைக்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.மழைக்காலங்களில், பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மேடு, பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள், தடுமாறி கீழே விழுந்து காயமடைவது வழக்கமாகியுள்ளது. ரோட்டில் செல்லும் வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. ரோடு முழுக்க பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள், உடல்ரீதியாகவும் பாதிக்கின்றனர்.பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கி துவங்கப்பட்ட இந்த திட்டத்தையே, மீண்டும் அறிவித்தார். இந்த புறவழிச்சாலைக்கு எந்த ஆட்சி சொந்தம் கொண்டாடினாலும் பரவாயில்லை, தரமாக ரோடு அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விபத்துக்கு அச்சாரம்

பொதுமக்கள் கூறியதாவது:மேற்கு புறவழிச்சாலை திட்டமும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளதால் ரோடுகளை சீரமைக்க அக்கறை காட்டாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.இத்திட்டத்திற்காக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி முதல், கிருஷ்ணா குளம் வழியாக நல்லுார் செல்லும் வரையிலும், ரோட்டின் இருபக்கமும் இருந்து மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டன.ஆனால், அந்த மரத்தின் வேர் பகுதிகள் அனைத்தும் தோண்டி போடப்பட்டு அப்படியே உள்ளன. ஆர்.பொன்னாபுரம் ரோடு தோண்டி போடப்பட்டுள்ளதால் சிரமமாக உள்ளது.இந்நிலையில், ரோடும் படுமோசமாக இருப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தினமும், கரடு, முரடான ரோட்டில் பயணிக்கவே சாகசம் செய்ய வேண்டியதுள்ளது. வாகனங்களில் செல்வோர், இந்த ரோட்டில் செல்ல தனி பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியதுள்ளது. கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு இந்த ரோட்டில் அழைத்து செல்ல முடியவில்லை.இன்னும் சில மாதங்களில் பணிகள் முடியும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எப்போது தான் இந்த ரோட்டுக்கு தீர்வு கிடைக்கும் என தெரியவில்லை. புறவழிச்சாலை திட்டப்பணி துவங்குவதற்கு காலதாமதம் ஏற்படுமானால், தற்போது குண்டும் குழியுமாக உள்ள ரோட்டையாவது சீரமைத்து, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
மே 22, 2024 13:57

சுபாஷ் கல்லூரி எதிரே உள்ள இரயில்வே மேம்பாலம் முன் யோசனை இன்றி குறுகலாக அமைத்ததால் ரோடு விரிவாக்கம் தாமதமாகலாம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை