| ADDED : ஆக 08, 2024 11:39 PM
சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றிய கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்லடம், சூலுார், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் மூலம், வேலைக்கு சென்று வருகின்றனர்.கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களையே நம்பி உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே கிராமப்புறங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் படிப்படியாக குறைக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:கிராமங்களில் உள்ள நாங்கள் வெளியிடங்களுக்கு செல்ல பஸ்களை மட்டுமே நம்பி உள்ளோம். தினமும் நான்கு முறை வந்து சென்ற பஸ்கள் இப்போது, இரு முறை மட்டுமே வருகிறது. பல ஊர்களுக்கு ஒரு முறை மட்டுமே பஸ் வந்து செல்கிறது. இதனால், அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் முடியாத நிலை உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் தினமும் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது.பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. படிப்படியாக பஸ்களை குறைத்து விட்டால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆட்டோ, காரில் செல்லும் அளவுக்கு எங்களுக்கு வசதி கிடையாது. எனவே, ஏற்கனவே இயக்கப்பட்ட பஸ்களை அதே நேரங்களில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.