உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியினர் குடியிருப்புக்கு மின் இணைப்பு இல்லைவிடியல் பிறக்குமா!டிரான்ஸ்பார்மர் அகற்றும் தகவல் பரவியதால் பரபரப்பு

பழங்குடியினர் குடியிருப்புக்கு மின் இணைப்பு இல்லைவிடியல் பிறக்குமா!டிரான்ஸ்பார்மர் அகற்றும் தகவல் பரவியதால் பரபரப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் எருமைப்பாறையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள டிரான்ஸ்பார்மரை அகற்ற கூடாது என, சப் - கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில், எருமைப்பாறை, கூமாட்டி, கோழிகமுத்தி உள்ளிட்ட பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன.அதில், எருமைப்பாறையில், 30, கோழிகமுத்தியில், 94, கூமாட்டியில், 40 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன.டாப்சிலிப் அருகே உள்ள, எருமைப்பாறை பழங்குடியின குடியிருப்புக்கு, மின்இணைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து, மின்வாரியம் சார்பில், அங்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.இந்நிலையில், டிரான்ஸ்பார்மரை அகற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரான்ஸ்பார்மரை அகற்ற கூடாது எனக்கூறி அப்பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பத்மினி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனு:வனப்பகுதியில் ஆனைமலை குன்றுகளில் பல தலைமுறைகளாக, பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கோரிக்கைகள், பலகட்ட போராட்டங்கள் வாயிலாக, எருமைப்பாறை மலைக்கிராமத்தில் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் மின்வாரியத்தின் வாயிலாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.இதுவரை மின் இணைப்பு வழங்க, 'ஆன்லைன்' வாயிலாக குடும்பத்துக்கு, 3,500 ரூபாய் வீதம் செலுத்தி, மூன்றாண்டுகள் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை.இந்நிலையில், வனத்துறை நிதி ஒதுக்கீடு செய்யாததால், எருமைப்பாறை கிராமத்தில் அமைத்த டிரான்ஸ்பார்மரை மின்வாரியம் அகற்ற போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து விசாரித்து டிரான்ஸ்பார்மரை அகற்றாமல் இருக்கவும், விரைவில் மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோழிகமுத்தி, கூமாட்டி கிராமங்களுக்கு மின்வசதி செய்து தர வேண்டும்.உலாந்தி வனச்சரகத்தில் எருமைப்பாறை வனக்கிராமத்துக்குள் அமைக்கப்பட்டள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மரை அகற்றப்போவதாக வந்துள்ள மின்வாரிய அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எருமைப்பாறை கிராமத்துக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தயங்குவது ஏனோ?

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறுகையில், ''டாப்சிலிப் பகுதியில், மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணியர் தங்கிச் செல்வதற்காக அறைகளில் மின் இணைப்பு வசதி உள்ளது.அதன் அருகே, 200 மீட்டர் துாரத்தில் உள்ள எருமைப்பாறையில் மின் இணைப்பு வழங்க வனத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். எருமைப்பாறை பகுதிக்கு மின் இணைப்பு கொடுத்தால், கூமாட்டி, கோழிகமுத்தி குடியிருப்புக்கும் வழங்க வேண்டும் என நினைக்கின்றனர்.பழங்குடியின குடியிருப்பு பகுதியில், மின் இணைப்பு இல்லாததால், மாணவர்கள் கல்வி கற்பது பாதிக்கிறது. அங்குள்ள டிரான்ஸ்பார்மரை அகற்ற கூடாது. குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ