| ADDED : மே 12, 2024 11:04 PM
அன்னுார்;தேசிய நெடுஞ்சாலையில், கணேசபுரத்தில், இரண்டு மரங்கள் விழும் அபாய நிலையில் உள்ளன.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம், அன்னுார் வழியாக, தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன.இங்கு கணேசபுரத்தில், காட்டம்பட்டி பிரிவில், ரோட்டின் மேற்கு பகுதியில் 40 அடி உயரமுள்ள இரண்டு வாதநாராயணன் மரங்கள் வறண்டு காய்ந்து சாய்ந்த நிலையில் உள்ளன.எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இங்கு ஒரு கி.மீ., தூரத்திற்கு வளைவுகள் இல்லாமல் சாலை நேர்கோடாக உள்ளது. எனவே வாகனங்கள் 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் செல்கின்றன. இந்நிலையில் காய்ந்து வறண்டு போன இந்த மரங்கள் திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தால் பெரும் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் அபாய நிலையில் உள்ள மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். 'இதற்கு கூடுதலாக வேறு இடங்களில் புதிதாக மரங்கள் நட வேண்டும்,' என கணேசபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.