விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்
வால்பாறை;வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தை சீரமைக்க வேண்டும் என, விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரின் மத்தியில், நகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் ஆண்டு தோறும், மாநில, மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடக்கிறது.இந்நிலையில், கால்பந்து சங்க நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு விளையாட்டு மையதானம் சீரமைக்கப்பட்டது. ஆனால், முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.இது குறித்து, வால்பாறை கால்பந்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'விளையாட்டு வீரர்கள், நகராட்சி விளையாட்டு மைதானத்தை நம்பிதான் உள்ளனர். இந்த ஆண்டும், மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டி நடக்கவுள்ளது. போட்டி துவங்குவதற்கு முன், நகராட்சி சார்பில், விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.பழுதடைந்த நிலையில் உள்ள கலையரங்கத்தை நகராட்சி சார்பில் கட்டித்தர வேண்டும். மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.