பொள்ளாச்சி:தனியார் பஸ்கள், அரசு 'பர்மிட்' பெற்றும், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு, இரவு நேரத்தில் இயக்கப்படுவதில்லை, என, புகார் எழுந்துள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அதிகப்படியான அரசு டவுன் பஸ்கள் மட்டுமின்றி, தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, தனியார் பஸ்களைப் பொறுத்தமட்டில், இரவு நேரத்தில் கிராமங்களுக்கு முறையான வழித்தடத்தில் இயக்க வேண்டும். அந்தந்த கிராமத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் தனியார் பஸ்கள், மீண்டும் மறுநாள் அதிகாலை, 3:45 மணி சேவையைத் துவக்க வேண்டும் என, 'பர்மிட்' வழங்கப்பட்டுள்ளது.ஆனால், தனியார் பஸ்கள், இரவு நேரத்தில், கிராமங்களுக்கு முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால், கிராம மக்கள் பாதிக்கின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள், சில நேரங்களில் வரையறுக்கப்பட்ட வழித்தடத்தில் இருந்து விலகி மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால், பஸ் வரும் என வெகுநேரம் காத்திருக்கும் கிராம மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.இதேபோல, இரவு, 10:00 மணிக்கு, பஸ் ஸ்டாண்டில் இருந்து கிராமங்களுக்கு, அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது. இது ஒருபுறமிருக்க, தனியா பஸ்கள், இரவு நேரங்களில் கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என, 'பர்மிட்' இருந்தும் இயக்கப்படுவதில்லை.இதனால், வெளியூர் சென்று திரும்பும் மக்கள் அவதியடைகின்றனர். இரவு நேரத்தில் தனியார் பஸ்களின் இயக்கத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முறைபடுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.