உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரிசல் நிலத்தில் நீர் மேலாண்மை; விவசாயிகளுக்கு அறிவுரை

கரிசல் நிலத்தில் நீர் மேலாண்மை; விவசாயிகளுக்கு அறிவுரை

பெ.நா.பாளையம்; கரிசல் மண் நிலத்தில் நீர் மேலாண்மை உத்திகள் குறித்து பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.கரிசல் மண்ணில், களிப் பகுதியானது மற்ற மண் வகைகளை காட்டிலும், அதிகமாக உள்ளது. சுண்ணாம்பு சத்தும் இம்மண்ணில் உள்ளது. சுமாரான ஈர நிலையில் மிகவும் பிசுபிசுப்பும், ஒட்டும் தன்மையும் உள்ளது. கோடையில் அதிகமாக வெடிப்பு ஏற்பட்டு, தன்னைத்தானே உழுதுகொள்ளும் அல்லது பிரட்டிக்கொள்ளும் தன்மையும் உடையது. களியின் அளவு அதிகமாக இருப்பதால், நீர் பிடிப்பு திறன் அதிகம். ஆனால், நீர் கடத்தும் திறனும், நீர் கசிவும் மிக குறைவாகும்.நீர்க்கசிவு குறைவாக இருப்பதால், நெல் பயிருக்கு சிக்கன நீர் நிர்வாகம் செய்ய ஏதுவாகும். சோளம், கம்பு, பருத்தி, கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு தொடர்ச்சியாக அடை மழை பெய்தால், வடிகால் வசதி செய்யும் போது, காற்றோட்ட வசதி வேர் மண்டலத்தில் அதிகரித்து, நல்ல ஊட்டச்சத்து கிடைத்து, உற்பத்தி திறன் குறையாமல் இருக்கும். மண்ணில் கரையும் உப்புக்கள் அதிகமாக இருப்பின், நெல் சாகுபடி செய்தால், உவர் கால நிலமாக மாறிவிடும். கரிசல் மண்ணுடன் ஏக்கருக்கு, 20 வண்டி மணல் அல்லது செம்மண் கலந்து உழுதால், மண்ணில் நீர் கடத்தல், நீர் ஊடுருவுதல் ஆகியவை மேம்பட்டு நல்ல பலன் கிடைக்கும்.கரிசல் மண்ணுள்ள நிலத்தில், 20 மீட்டருக்கு ஒரு வடிகால் வாய்க்கால், 60 செ.மீ., ஆழம் வெட்டி கழிவு நீரை அவ்வப்போது வெளியேற்றினால் பயிர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கோடை உழவு செய்வதால் மழை நீரையும் மண்ணில் உள்ள ஈரத்தையும் வீணாக்காமல் சேர்த்து வைக்கலாம்.சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனத்தை கையாண்டால், நீரை சிக்கனமாக பயன்படுத்தலாம். நீர் பிடிப்பு திறன் அதிகமாக உள்ளதால், இடைவெளி விட்டு நீர் பாய்ச்சலாம்.நீண்ட நாட்கள் இடைவெளியில் நீர் பாசனம் செய்து பயிர் விளைச்சலை பெருக்கலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர், விவசாயிகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !