கோவை:தமிழக மின்வாரியத்தில், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கடந்த 9ம் தேதி மாநிலம் முழுவதும், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைய நாள், தமிழகம் முழுவதும், 7,000த்துக்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் பங்கேற்றதாகவும், இதனால், மின்வாரியத்தில் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறி, போராட்டத்துக்கு எதிராக, மின்வாரியம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையறிந்த, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தங்கள் தரப்பு நியாயங்களை, மூத்த வக்கீல்கள் வைகை, ஆஜய் கோஷ் வாயிலாக தெரிவித்தனர்.அதில், 'மின்வாரியத்தில், 60,000த்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால், மின்வாரியம் சம்பந்தமாக பொதுமக்களின் தேவையை உரிய காலத்தில் நிறைவேற்ற முடிவதில்லை. இப்பணியிடங்களை நிரப்பி, பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும் என்பதை வலியுறுத்தி தான் போராட்டம் நடத்தப்பட்டது' என, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இதையடுத்து, மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என, மின்வாரிய செயலர் மற்றும் தமிழக அரசுக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கிய நிலையில், வழக்கு, வரும் 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.