உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களமிறங்கிய இளம் வாக்காளர்களால் கோவையின் புது எம்.பி., யார்? கணிக்க முடியாத அரசியல் கட்சியினர்

களமிறங்கிய இளம் வாக்காளர்களால் கோவையின் புது எம்.பி., யார்? கணிக்க முடியாத அரசியல் கட்சியினர்

கோவை:கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், அரசியல் கட்சியினரை கலக்கத்தில் வைத்திருக்கிறது. சாதாரணமாக தேர்தலில் பதிவாகும் ஓட்டு சதவீதத்தை மையமாக வைத்து, யார் வெற்றி பெறுவார் என்பதை, ஓரளவு கணித்து விட முடியும். இந்த முறை, புதிய வாக்காளர்கள் பலர் ஓட்டு அளித்துள்ளதால், வெற்றியை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போடுவதற்கு தகுதி உள்ளவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதில், 13 லட்சத்து, 64 ஆயிரத்து, 975 வாக்காளர்களே ஓட்டளித்தனர். இது, 64.81 சதவீதம். ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் பிரிவினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்.இருப்பினும், 0.95 சதவீதமே ஓட்டு சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 331 வாக்காளர்களே அதிகமாக ஓட்டளித்திருக்கின்றனர். சட்டசபை வாரியாக பதிவான ஓட்டு விபரங்களை, அரசியல் கட்சியினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.ஏனெனில், தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தொகுதியான கவுண்டம்பாளையத்தில் மட்டும் மூன்று லட்சத்து, 12 ஆயிரத்து, 389 ஓட்டுகள்( 66.42 சதவீதம்) பதிவாகியிருக்கின்றன.இதேபோல், பல்லடத்தில் இரண்டு லட்சத்து, 68 ஆயிரத்து, 195 ஓட்டுகள்(67.42 சதவீதம்), சூலுாரில் இரண்டு லட்சத்து, 44 ஆயிரத்து, 732 ஓட்டுகள்(75.33 சதவீதம்) பதிவாகியுள்ளன.மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் இம்மூன்றில், ஓட்டு சதவீதம் கூடுதலாக பதிவாகியிருப்பதால், அரசியல் கட்சியினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.நகர்ப்பகுதியான சிங்காநல்லுார், கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில், 2021ல் நடந்த சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை விட, குறைவாக பதிவாகியிருக்கிறது.முதல்முறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் என, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்தும், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்திருப்பதால், கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.இம்முறை பதிவான ஓட்டுகள், பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., என மூன்றாக பிரிவதால், வெற்றி பெறும் வாக்காளர்கள் பெறும் ஓட்டு வித்தியாசம், மிகவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பாக, அரசியல் கட்சியினர் சிலர் கூறியதாவது:சட்டசபை தொகுதிகளில், 60 சதவீதம் பதிவானால், கட்சியினர் ஓட்டு முழுமையாக பதிவாகியிருக்கிறது என கூறுவோம். கவுண்டம்பாளையம், பல்லடம், சூலுாரில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.இத்தொகுதிகளில் புது வாக்காளர்கள் ஏராளமானோர், ஓட்டுச்சாவடிக்கு வந்திருக்கின்றனர். நகர்ப்பகுதியில் உள்ள மூன்று தொகுதிகள், 60 சதவீதத்தை நெருங்கியுள்ளது.இங்கு பதிவான ஓட்டுகளை, மூன்று வேட்பாளர்கள் பகிர்வர். அதனால், வெற்றி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதை, எளிதாக கணக்கிட வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சட்டசபை காட்டிலும் ஓட்டுப்பதிவு குறைவு

n கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில், 2 லட்சத்து, 2 ஆயிரத்து, 799 ஓட்டு பதிவானது; இப்போது, ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 532 ஓட்டுகளே பதிவாகி இருக்கின்றன.n சிங்காநல்லுார் தொகுதியில், இரண்டு லட்சத்து, 2 ஆயிரத்து, 180 ஓட்டுகள் பதிவாகியிருந்தன; இப்போது, ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 109 ஓட்டுகளே பதிவாகியுள்ளன.n கோவை தெற்கு தொகுதியில், ஒரு லட்சத்து, 55 ஆயிரத்து, 237 ஓட்டுகள் பதிவாகியிருந்தன; இப்போது, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 16 ஓட்டுகளே பதிவாகியிருக்கின்றன.n இம்மூன்று தொகுதிகளிலும் சேர்த்து, 19 ஆயிரத்து, 959 ஓட்டுகள், 2021 சட்டசபை தேர்தலை காட்டிலும் குறைவாக பதிவாகியுள்ளன.n நடிகர் கமல் கட்சியான, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் இம்மூன்று தொகுதிகளிலும் சேர்த்து, ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 839 ஓட்டுகள் பெற்றிருந்தனர். இந்த ஓட்டுகள் இம்முறை, எந்த வேட்பாளருக்கு சென்றது என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி