உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழுக்கி விழாமல் வீடு போய் சேர்வதில்லை! நியூ தில்லை நகர் மக்களுக்கு நிம்மதியே இல்லை

வழுக்கி விழாமல் வீடு போய் சேர்வதில்லை! நியூ தில்லை நகர் மக்களுக்கு நிம்மதியே இல்லை

கோவை;பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்துவரும் பகுதிகளில், முழுமையாக பணிகளை முடிக்காததால், சிறிது நேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.கோவை மாநகராட்சியுடன் கடந்த, 2011ம் ஆண்டு இணைந்த குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில், தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடுகளில், பணிகளை முழுமையாக முடிக்காததால், மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.வடவள்ளி அருகே, 36வது வார்டு நியூ தில்லை நகர், 6, 7 உள்ளிட்ட வீதிகளில் இதற்கென குழாய் பதித்து, மூன்று மாதங்களுக்கும் மேலாகிறது.ஆனால், தோண்டப்பட்ட ரோடு சமன் செய்யப்படாததால், மழையால் ரோடு சேறும், சகதியுமாக மாறிவிட்டது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'குழாய் பதிக்கப்பட்ட இக்குறுகிய ரோட்டில், மண் திட்டுக்களால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. மழையால் வாகனங்கள் 'ஸ்கிட்' ஆகி விபத்துக்குள்ளாகின்றன. மழை காலம் துவங்கும் முன், இங்கு ரோடு அமைத்துதர வேண்டும்' என்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' இப்பகுதியில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவது, குழாய் பதிப்பு என அனைத்தும் முடிந்தவுடன் ரோடு போடப்படும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி பணிகள் வேகப்படுத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை