கோவை:மாநகராட்சி வடக்கு மண்டலம், 12வது வார்டில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரிக்கரையானது, 3.97 கி.மீ., நீளத்தை கொண்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியை மேம்படுத்த ரூ.1.70 கோடிக்கு, 'அம்ரூத் 2.0' திட்டத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (டுபிட்கோ) வாயிலாக, திட்டம் மதிப்பாய்வு செய்யப்பட்டதில், திட்ட மதிப்பீடு ரூ.1.15 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் வாயிலாக சின்னவேடம்பட்டி ஏரிக்கரை, 1 கி.மீ., நீளத்துக்கு பலப்படுத்தப்படுகிறது.நடைபாதை, சைக்கிள் ஓட்டும் தடம், 20 இருக்கைகள், 35 மின் விளக்குகள், 500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. கவுசிகா நீர் கரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் நடவடிக்கையால், சின்னவேடம்பட்டி ஏரியும், ராஜவாய்க்காலும், 8 கி.மீ., துாரத்துக்கு துார்வாரப்பட்டன.இதனால், கடந்தாண்டு நவ., மாதம் பெய்த பருவமழையால், 31 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரியை நீர் சூழ்ந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. தற்போது, ஏரிக்கரை பலப்படுத்தப்படுவதால் நீர் நிலை மேம்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயரும்; பொது மக்களுக்கும் பொழுது போக்கு அம்சமாக இருக்கும் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.