கோவை;கோவை மாவட்டத்தில், 255 மையங்களில், நேற்று பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வு நடந்தது.தமிழகத்தில், மாநில கல்வித்திட்டம் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 1ம் தேதி துவங்கி, 22 ம் தேதி வரை, பொதுத்தேர்வு நடக்கிறது. இம்மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.கோவை மாவட்டத்தில், 363 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 31 ஆயிரத்து 90 மாணவர்கள் செய்முறை பொதுத்தேர்வில் நேற்று பங்கேற்றனர். இவர்களுக்கு, 255 மையங்களில் செய்முறைத்தேர்வு நடந்தது. இதில், அகமதிப்பீடு, செய்முறை விளக்கம், கண்காணிப்பு, பறக்கும்படை உள்ளிட்ட பணிகளுக்கு ஆசிரி யர்கள் நியமிக்கப்பட்டனர். வரும் 17ம் தேதி வரை, இரு பிரிவுகளாக மாணவர்கள் இத்தேர்வை எதிர்கொள்வர். செய்முறை தேர்வு அல்லாத பாடப்பிரிவு மாணவர்களுக்கு, பள்ளிகளில் பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வு, 255 மையங்களில் நடக்கிறது. இம்மையங்களில் தேர்வு நடத்துவதற்கான அடிப்படை வசதிகள் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்வு நடத்துவதற்கான ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.