261 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
மேட்டுப்பாளையம்; விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, மேட்டுப்பாளையம் தாலுகாவில், ஹிந்து முன்னணி சார்பில், 261 இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து, விழா கொண்டாட முடிவு செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம், 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா குறித்து மேட்டுப்பாளையம் நகர ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில், 76 இடங்களிலும், சிறுமுகையில், 43, காரமடை நகரம் மற்றும் ஒன்றியத்தில், 142 இடங்கள் மொத்தம், 261 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதை மூன்று நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தை துவக்கி வைக்க, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது. இவ்விழாவில் ஹிந்து முன்னணியினர் கட்டுக்கோப்புடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகரத் தலைவர் தேவன் முன்னிலை வகித்தார். நகர நிர்வாகிகள், ஏராளமானவர்கள் பங்கேற்றனர். துணைத் தலைவர் தனபால் நன்றி கூறினார்.