உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் காயம்

யானை தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் காயம்

வால்பாறை; வால்பாறை அருகே, யானை தாக்கியதில் நான்கு எஸ்டேட் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.வால்பாறை அடுத்துள்ளது கெஜமுடி எஸ்டேட் எல்.டி.,டிவிஷன். இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, யானைகள் கூட்டமாக வந்தன.யானைகளின் சப்தம் கேட்டு சரோஜினி,52, என்பவர் வீட்டின் பின் புறம் கதவவை திறந்த போது, வெளியே நின்றிருந்த யானை தாக்கியதில், கை மற்றும் கால்களில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த தொழிலாளியை காப்பாற்ற சென்ற போது, யானையை கண்டு அச்சத்தில் ஓடிய தொழிலாளர்கள், உதயகுமார்,32, சந்திரன்,62, கார்த்தீஸ்வரி,40, ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.யானையால் காயமடைந்த நான்கு தொழிலாளர்களுக்கும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து, தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். யானைகள் நடமாட்டம் குறித்து, மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவமழைக்கு பின், வால்பாறையில் வனவளம் செழிப்பாக உள்ளதால், கேரளாவில் இருந்து யானைகள் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளன. தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளை துன்புறுத்தக்கூடாது. தேவையில்லாமல் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்களை பகல் நேரத்தில் தேயிலை பறிக்க அனுமதிக்க்கூடாது.இவ்வாறு, கூறினர்.

பள்ளிக்கு 'விசிட்'

வில்லோனி எஸ்டேட் எல்.டி., டிவிஷன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 26 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு பள்ளிக்கு விசிட் செய்த யானைகள், வகுப்பறையில் இருந்த பீரோ, டேபிள்களை சேதப்படுத்தியது.அதன்பின், கொடிமரத்தையும் சேதப்படுத்தியது. பள்ளி வளாகத்தில் இருந்த சத்துணவு மையத்தை இடித்து பொருட்களை சேதப்படுத்தின.இரவு நேரத்தில் பள்ளியை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பிரபாகர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில், நகராட்சி கவுன்சிலர் கவிதா மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை