| ADDED : ஜூலை 14, 2011 09:27 PM
கோவை : உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி) ரங்கநாதன்
தலைமையில் கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார
வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர். உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்த
தேவையான ஆரம்பக் கட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ரங்கநாதன் கூறியதாவது: இந்த முறை நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில்
ஒரு பங்கு வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பெண்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ள வார்டுகள், எஸ்.சி., எஸ்.டி., மக்கள் தொகை
எண்ணிக்கை கண்டறியப்பட வேண்டும்.மாவட்டத்தில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட
இரண்டு வார்டுகளுக்கு, ஒரே பூத்தில் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.
இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2035 வார்டுகளில், 619 வார்டுகளுக்கு
இரட்டை 'பூத்'கள் அமைக்க வேண்டும். இவ்வாறு, ரங்கநாதன் கூறினார். ஜூலை 18ல்
சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்து மாவட்ட அலுவலர்களின்
ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. அதற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து
தயார் நிலை யில் இருக்க, இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.