| ADDED : பிப் 15, 2024 06:46 AM
கோவை : ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களிடம், கைரேகை பதிவு செய்யும் பணி, 65 சதவீதம் முடிந்து இருப்பதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும், PHH மற்றும் AAY ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது கைரேகையை (EKYC) பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை, 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, ரேஷன் கடை பணியாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த பணி, 65 சதவீதம் முடிந்துள்ளதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு, கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு தேவையில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரது கைரேகையும், பதிவு செய்வது அவசியமாகும். கோவை மாவட்டத்தில் இதுவரை, 65 சதவீதம் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள கார்டுதாரர்களிடமும், கைரேகை பதிவு செய்யும் பணி நடக்கிறது. விரைவாக முடிக்க, கார்டுதாரர்களின் வீடுகளுக்கே ரேஷன் பணியாளர்கள் சென்று கைரேகை பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், இந்த பணி முழுமையாக முடிந்து விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.