உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  7,696 பேருக்கு சர்க்கரை பாதிப்பு: ஒன்பது மாதங்களில் 7,696 பேருக்கு சர்க்கரை பாதிப்பு

 7,696 பேருக்கு சர்க்கரை பாதிப்பு: ஒன்பது மாதங்களில் 7,696 பேருக்கு சர்க்கரை பாதிப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகள் பிரிவுக்கு புதிதாக மாதந்தோறும், சராசரியாக 855 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் புள்ளிவிபரங்களின் படி, 2000ம் ஆண்டில் 20 முதல் 79 வயதுடையவர்களில், 32.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். 2024ல், 89.8 மில்லியனாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 174.6 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. சர்க்கரை பாதிப்பில் வயதானவர்களே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இளைஞர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. அதையும் தாண்டி, குழந்தைகள் மத்தியிலும் இப்பாதிப்பு துவங்கியுள்ளது, ஒரு எச்சரிக்கை அலாரம். கோவை அரசு மருத்துவமனையில், 2024ம் ஆண்டில், 9,264 பேரும், 2025ல் 7,696 பேரும் (செப்., இறுதி வரை) புதிய நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், புதிய நோயாளிகள் எண்ணிக்கை, 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மத்தியில் காணப்படும் டைப்1 சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது. பெரியவர்களை பாதிக்கும் டைப் 2 பாதிப்பில், 100 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 8 வயது மாணவர் ஒருவரும் சமீபத்தில் இப்பட்டியலில் இணைந்துள்ளார் என்கிறார், அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் பிரிவு தலைவர் டாக்டர் வெண்கோ ஜெயபிரசாத்.

'வாழ்வியல் மாற்றம் காப்பாற்றும்'

டாக்டர் வெண்கோ பிரசாத் கூறியதாவது: பெற்றோர் குழந்தைகளின் வாழ்வியல் முறைகளில், மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம். உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைதல், அதிக தண்ணீர் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பரம்பரையில் சர்க்கரை பாதிப்பு இருப்பின், 10-12 வயதுக்கு மேல் சர்க்கரை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. டைப்2 பாதிப்பு அறிகுறி, 100ல் 70 பேருக்கு தெரியாது என்பதால், ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வதும், சரியான வாழ்வியல் முறையை பின்பற்றுவதுமே சரியான தீர்வாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ