உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் இரு தினங்களில், 775 ஓட்டுகள் பதிவு

ரயில்வே தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் இரு தினங்களில், 775 ஓட்டுகள் பதிவு

கோவை: கடந்த இரு தினங்கள் நடந்த ரயில்வே துறை, அங்கீகாரம் பெறுவதற்கான தொழிற்சங்க தேர்தலில், கோவையில், 775 ஓட்டுகள் பதிவாகின.இந்திய ரயில்வேயில், அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். முதல் முறையாக 2007ல் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்தது. அதன்பின், 2013ம் ஆண்டில் தொழிற்சங்க தேர்தல் நடந்தது.கொரோனா தொற்று பரவலால், 2019க்கு பின், இத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. பல்வேறு முயற்சிகளுக்கு பின், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் தேர்தல் துவங்கியது; இன்று நிறைவடைகிறது.மூன்று நாட்கள் நடக்கும் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படுகிறது. டிச., 12ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.,), தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம்(டி.ஆர்.இ.யு.,), தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்.,), தக்சின் ரயில்வே கார்மிக் சங்கம்(டி.ஆர்.கே.எஸ்.,), ரயில் மஸ்துார் யூனியன்(ஆர்.எம்.யு.,) ஆகிய ஐந்து தொழிற்சங்கங்கள் அங்கீகாரத்தை பெற, போட்டி போடுகின்றன. சேலம் கோட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகள் உள்ளன. சேலம் கோட்டத்தில் கோவை மற்றும் போத்தனுார் எஸ் அண்ட் டி பணிமனை ஆகியவற்றில் தொழிற்சங்கங்கள் மிகவும் செல்வாக்குடன் இருந்து வருகின்றன. சேலம் கோட்டத்தில் மொத்தம், 8,583 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க வசதியாக, கோட்டத்தின், 14 இடங்களில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டன.கோவையை பொறுத்தவரை, கோவை ரயில்வே ஸ்டேஷன் வி.ஐ.பி.,க் களுக்கான அறையில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, போத்துனுார் எஸ் அண்ட் டி பணிமனை, மேட்டுப்பாளையம், போத்தனுார் ரயில்வே திருமண மண்டபம் ஆகிய நான்கு இடங்களில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஓட்டுச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை முதல் தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.கடந்த இரு தினங்களில், கோவையில், 768 ஓட்டுகள், ஏழு தபால் ஓட்டுகள் என, மொத்தம், 775 ஓட்டுகள் பதிவாகின. இன்றுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ