சிறுத்தையை பிடிக்க சுண்டக்கொரையில் கூண்டு
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. காரமடை வனச்சரகம் வெள்ளியங்காடு அருகே சுண்டக்கொரை பகுதியில் ஆடுகளை விவசாயிகள் பட்டிகளில் அடைத்து வைத்து வளர்த்து வருகின்றனர். ஆடுகளை சிறுத்தை தூக்கி செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனப்பணியாளர்கள் அப்பகுதியில் நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தையின் காலடி தடங்கள் கண்டறியப்பட்டது. பின், சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இக்கூண்டிற்குள் ஒரு ஆடு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.