கோவை : கடந்த ஏப்., முதல் செப்., வரையிலான 6 மாதங்களில், சேலம் கோட்டத்தில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து, 10 கோடியே, 82 ஆயிரத்து, 514 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது, 37.1 சதவீதம் அதிகம். பதியப்பட்ட மொத்த வழக்குகள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 832 ஆகும்.டிக்கெட் இன்றி பயணித்தது தொடர்பாக, 79 ஆயிரத்து 6 வழக்குகள் பதியப்பட்டு, 6.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இது, முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால், வழக்குகள் 16.2 சதவீதம் அதிகம், அபராதம் 20 சதவீதம் அதிகம்.குழந்தைகளுக்கான டிக்கெட்டில் பெரியவர்கள் பயணித்தல், சாதாரண வகுப்பு டிக்கெட்டில், உயர் வகுப்பில் பயணித்தல், வேறு வகுப்பில் பயணத்தில், சாதாரண ரயில் டிக்கெட்டில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தல், பயண தூரத்தைக் காட்டிலும் கூடுதலாக பயணித்தல் உள்ளிட்ட, முறைகேடான பயணங்களுக்கு 68,681 வழக்குகள் பதியப்பட்டு, 3.71 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 68.9 சதவீதம் அதிகமாகும்.முன்பதிவு செய்யாமல், லக்கேஜ் கொண்டு சென்ற வகையில், ரூ.1.25 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.லக்கேஜ் பொறுத்தவரை, முதல்வகுப்பு ஏ.சி.,யில் ஒரு பயணி 70 கிலோ வரை இலவசமாகக் கொண்டு செல்லலாம். டயர் 2 ஸ்லீப்பர் அல்லது முதல் வகுப்புக்கு 50 கிலோ, ஏ.சி., 3 டயர் ஸ்லீப்பர் 40 கிலோ, ஸ்லீப்பர் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை, இலவசமாக கொண்டு செல்லலாம். கூடுதல் சுமைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.