பொள்ளாச்சி : வால்பாறை மலைப்பாதையில், ஆங்காங்கே உள்ள வளைவுகளில், விபத்துகளை தடுக்கும் வகையில், 'ரோலிங் பேரியர் கார்ட்ரெயில்' அமைக்கப்பட்டு வருகின்றன.பொள்ளாச்சி அருகே ஆழியாரில் இருந்து வால்பாறைக்கு செல்லக்கூடிய வழித்தடம், 43 கி.மீ., துாரம் மலைப்பாதையில், 40 கொண்டை ஊசி வளைவுகளுடன் நீள்கிறது.வால்பாறை மட்டுமின்றி, அங்கிருந்து கேரளா மாநிலம் அதிரப்பள்ளிக்கு வனப்பகுதியின் நடுவே செல்லும் சாலை அமைந்துள்ளதால், அதிகளவிலான சுற்றுலாப்பயணியர், இந்த மலைப்பாதையில் அடிக்கடி பயணிக்கின்றனர்.ரோடு புதுப்பிக்கப்பட்டிருந்ததாலும், மழையின் காரணமாக அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது.கடந்த சில நாட்களாக, அட்டக்கட்டி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, தொங்கிக்கொண்டிருந்த பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன.அதேநேரம், இரண்டு மற்றும் மூன்றாவது கியரைத்தவிர்த்து, 'டாப்' கியரில் கீழ் நோக்கி வாகனங்களை இயக்குதல், அஜாக்கிரதை போன்ற பல்வேறு காரணங்களால் விபத்தும் அதிகரிக்கிறது.இதனால், மலைப்பாதையின் வளைவுகளில், நெடுஞ்சாலைத்துறையால், 'ரோலிங் பேரியர் கார்ட்ரெயில்' எனும் ரோலிங் தடுப்பு பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது.வாகனங்கள் தகடுகள் மீது மோதினால் கூட, சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில், 'ரப்பர்' வளையங்கள் காணப்படுகின்றன.இரவு நேரங்களில் ரப்பரில் உள்ள மஞ்சள் நிறம், வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தால் 'ரிப்ளக்ட்' ஆவதால், வாகன ஓட்டுநர்களும் பாதுகாப்புடன் கடந்து செல்கின்றனர்.குறிப்பாக, ரோலிங் தடைகள் ஒரு வாகனத்தை மீண்டும் சாலைக்குக் கொண்டு வரும் அல்லது நிறுத்தச்செய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஓவர்டேக்' செய்யக்கூடாது
நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது:மழை மற்றும் குளிரான சீதோஷ்ண நிலை நிலவும் போது, மலைப்பாதையில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவு மேகமூட்டம் காணப்படும். அப்போது, வாகனங்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.ஓட்டுநர்கள் மேக மூட்டம் காரணமாக, வாகனங்களை இயக்க முடியாமல் திணறுகின்றனர். தற்போது, இத்தகைய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் 'அலர்ட்' ஆக வாகனங்களை இயக்குவர். விபத்தும் தடுக்கப்படும்.மலைப்பாதையில் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்குதல், வளைவான பகுதிகளில் 'ஓவர் டேக்' செய்யாது பொறுமையாக செல்லுதல் என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே விபத்துக்கள் குறையும்.கடந்த காலங்களை ஒப்பிடும்போது, வால்பாறை மலைப்பாதையில் விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.