உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்சி பொருளான சுரங்க பாதை; திக்குமுக்காடும் வாகன ஓட்டுநர்கள்!

காட்சி பொருளான சுரங்க பாதை; திக்குமுக்காடும் வாகன ஓட்டுநர்கள்!

சப்-வேயை பயன்படுத்துங்க!

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே, மக்கள் சென்று வர சுரங்கநடைபாதை (சப்-வே) அமைக்கப்பட்டும் மக்கள் அதை உபயோகிக்காமல் ரோட்டை கடந்து சென்று வருகின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--- டேனியல், பொள்ளாச்சி.

ரோடு சேதம்

கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் பகுதியில் இருந்து, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.- - வெற்றிவேல், கிணத்துக்கடவு.

பாதுகாப்பு இல்லை

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், கேட்பார் இன்றி ரோட்டோரத்தில் பாதுகாப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால் வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடு போக அதிக வாய்ப்புள்ளது. எனவே, வாகனங்களை மாற்று இடத்தில் வைக்கவோ அல்லது கண்காணிப்பு கேமரா பொருத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கருணாகரன், பொள்ளாச்சி.

சுற்றுச்சுவர் சேதம்

உடுமலை யு.கே.சி. நகர் நகராட்சி துவக்கப்பள்ளி கட்டட வளாக சுவர் சேதமடைந்து, பல ஆண்டுகளாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர் சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவக்குமார், உடுமலை.

குப்பை கிடங்கில் தீ

பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், தீவிபத்து ஏற்பட்டு, ஒரு வாரமாக புகைந்து கொண்டிருக்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் கவனித்து சரி செய்ய வேண்டும்.- - அலெக்ஸ், பொள்ளாச்சி.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் அப்பகுதியில் பஸ்சுக்கு காத்திருப்பதற்கும், உள்ளே செல்வதற்கும் இடையூறாக உள்ளது. மேலும், பஸ் வந்தவுடன் பயணிகள் விரைவில் வர முடியாத வகையில் வாகனங்கள் இடையில் நிறுத்தப்பட்டிருப்பதால் சிரமப்படுகின்றனர்.- சித்ரா, மடத்துக்குளம்.

தெருநாய்கள் தொல்லை

உடுமலை, தாராபுரம் ரோடு சங்கர் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. ரோட்டில் நடக்கும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சுறுத்துவதால் தடுமாறி விழுகின்றனர். இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துவதால் விபத்துக்குள்ளாகின்றனர்.- விஷ்ணுபிரசாத், உடுமலை.

புதரில் கழிப்பிடம்

உடுமலை ஏரிபாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இதை உபயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன. இந்த புதர்செடிகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.- முருகன், உடுமலை.

சேதமடைந்த ரோடு

உடுமலை, சரவணா வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். முதியோர் ரோட்டில் நடப்பதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றனர். குண்டு குழி ரோட்டை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சாய்சரிதா, உடுமலை.

சந்தையில் குப்பை

உடுமலை, வாளவாடி சந்தை வளாகம் குப்பைகொட்டும் இடமாக மாறியுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் உரம் தயாரிப்பதற்கு மாற்றாக குப்பைக்கழிவுகளை திறந்த வெளியில் குவிப்பதால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- வசந்தி, பெரியவாளவாடி.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை, பொள்ளாச்சி ரோடு, மின் மயானம் அருகே இறைச்சி கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இதனால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. தெருநாய்களும் அப்பகுதியில் அதிகரித்துள்ளது.- காயத்ரி, உடுமலை.

மின் கம்பத்தில் கொடிகள்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, விளையாட்டு மைதானத்தில் இருக்கும் மின்கம்பத்தில், அதிகளவு செடி, கொடிகள் படர்ந்து மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ளது. மின்கம்பத்தில் மின் ஒயர்கள் பழுது நீக்கம் செய்ய மின் ஊழியர்கள் கம்பத்தில் ஏற சிரமப்படுகின்றனர். எனவே, மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்றம் செய்ய வேண்டும்.- ராமகிருஷ்ணன், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை