வனவிலங்குகளை விரட்ட கூடுதல் ரோந்து வாகனங்கள்
பெ.நா.பாளையம்; சின்னதடாகம் வட்டாரத்தில் வனவிலங்குகளை கட்டுப்படுத்த, கூடுதல் ரோந்து வாகனங்களை வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.கோவை வடக்கு சின்னதடாகம் வட்டாரத்தில் காளையனூர், திருவள்ளுவர் நகர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், மடத்தூர், பன்னிமடை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காட்டு யானைகளின் தொடர் ஊடுருவல் காரணமாக தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் பெருத்த சேதம் அடைகின்றன. காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த வனத்துறையினர் ரோந்து வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர். வனவிலங்குகளின் ஊடுருவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரண்டு ரோந்து வாகனங்களில் கூடுதல் வனத்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்,' விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டு ரோந்து வாகனங்கள் வனவிலங்குகளை விரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயிர்களின் அழிவை வனவிலங்குகளிடமிருந்து ஓரளவு காப்பாற்ற முடியும்' என்றனர்.