பொள்ளாச்சி:அரசியல் தலையீடுகளை கடந்து, மரப்பேட்டையில் நுாலகம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. நிரந்தர கட்டடம் அமைய உள்ளதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொது நுாலகத்துறைக்கு சொந்தமான கிளை நுாலகம், பொள்ளாச்சி மரப்பேட்டையில், 12 சென்ட் இடத்தில் கடந்த, 1954ல் அமைக்கப்பட்டது. ஒரு லட்சம் நுால்கள், 16 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நுாலகமாக செயல்படுகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் செயல்படும், 40 ஊர்ப்புற, பகுதிநேர மற்றும் கிளை நுாலகங்களின் ஊதிய மையமாகவும் உள்ளது.கடந்த, 69 ஆண்டுகளாக செயல்படும் நுாலகத்தின் கட்டடம், பழமையின் காரணமாக மழைக்கு ஒழுகியதுடன் பரிதாபமான நிலைக்கு மாறியது. மழை நீர் உள்ளே புகுந்ததால், புத்தகங்களை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.அரியவகை நுால்கள் மழையில் நனைந்து வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் என்றும், நுாலகத்தை புதுப்பிக்க வேண்டுமென்பது பொள்ளாச்சி வாசகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்தது.கடந்த, 2019ம் ஆண்டு நுாலகம் பழைய குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அங்கு போதுமான கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. வாசகர்கள் அமர்ந்து படிக்க முடியாத அளவுக்கு இடநெருக்கடி உள்ளது. மாற்று கட்டடம் இல்லாததால், தொடர்ந்து அங்கேயே நுாலகம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்தாண்டு செப்., மாதம் பழைய நுாலக கட்டடம் இடிக்கும் பணிகள் துவங்கின.மொத்தம், ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என நுாலகத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.அரசியல் தலையீட்டால், பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடம் இடிக்கப்பட்டும் பணிகள் துவங்காததால் வாசகர்கள் கவலை அடைந்தனர்.வாசகர்கள் கூறுகையில், 'அந்த இடத்தில் கட்டடம் கடந்த, 2019ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்தனர்.அதனால், பணிகளை எவ்வித இடையூறுமின்றி துவங்க வேண்டும்,' என்றனர்.இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின், அரசியல் தலையீடுகளை கடந்து, மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நுாலக கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம், ஒரு கோடி ரூபாய் செலவில், தரைதளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிக்கணும்!
பல ஆண்டு காலமாக நிரந்தர கட்டடம் இல்லாமல் இருந்த நுாலகத்துக்கு, புதிதாக கட்டடம் கட்டுவது வாசகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.வாசர்கள் நாளிதழ்கள் உள்ளிட்ட பிற இதழ்களை படிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அமர்ந்து படிக்க தனி பகுதியை ஒதுக்க வேண்டும். முக்கிய நுால்களை கணினி மயமாக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.