உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி; கோவை மாநகராட்சி புது முயற்சி

பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி; கோவை மாநகராட்சி புது முயற்சி

கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. முதற்கட்டமாக, 20 மேல்நிலை, 3 உயர்நிலை, 9 நடுநிலைப்பள்ளிகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 148 பள்ளிகள் செயல்படுகின்றன. 'மைண்ட் ஷை 360 டிகிரி கேரியர் கைடு' திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு உளவியல், உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ சார்ந்த உள்ளார்ந்த பயிற்சியும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைப் பயிற்சியும் நடத்தப்படவுள்ளன. ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரத்தினபுரி, வெங்கிடாபுரம், ஒப்பணக்கார வீதி, மணியகாரம்பாளையம், ஒக்கிலியர் காலனி, வடகோவை ஆகிய பகுதிகளில் செயல்படும் மேல்நிலைப்பள்ளிகள், எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 32 மாநகராட்சி பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு பள்ளிக்கும் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரம் செயல்முறை கற்றலுக்கும், 2 மணி நேரம் தேர்வுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். திட்ட பயிற்றுநர் கூறுகையில், 'தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து கோவையில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனில் தொழில்நுட்ப நுண்ணறிவு மேம்பட, இது அடித்தளம் அமைக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ