மண் சாலையால் பரிதவிப்பு
கணபதி, உடையாம்பாளையம், பார்க்டவுன், 12வது வார்டு, ஐந்தாவது வீதியில், கடந்த இரண்டு வருடங்களாக, தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. மழைக்காலங்களில் மண் சாலை சேறும், சகதியுமாக மாறி, வாகனங்களை இயக்க முடியவில்லை.- ராஜகோபால், கணபதி. கடும் துர்நாற்றம்
கே.கே.புதுார், ஏழாவது கிராஸ், காமராஜ் வீதியில், சாலையோரம் குப்பை பல வாரங்களாக குவிந்துக்கிடக்கிறது. காற்றில் பறக்கும் குப்பை, சாக்கடை கால்வாயில் விழுகிறது. இதனால், கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை விரைந்து அகற்ற வேண்டும்.- சேரன், கே.கே.புதுார். சாலை முழுவதும் குப்பை
சேரன்மாநகர், 22வது வார்டு, சோனா ஸ்டோர் அருகே, சாலையோரம் சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். குப்பையை நாய்கள் இழுத்து சாலை முழுவதும் சிதற விடுகின்றன. சாக்கடையில் குப்பை அடைத்து, கழிவு நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. - ஜெயராமன், விளாங்குறிச்சி. சுகாதாரமற்ற சுகாதார நிலையம்
தொப்பம்பட்டி, ஜெ.என்.பாளையம், ஏழாவது கிராஸ், ராஜராஜேஸ்வரி நகர், துணை சுகாதார நிலையத்திற்கு எதிரே பெருமளவு குப்பை தேங்கிக்கிடக்கிறது. சுகாதார நிலையத்தை சுற்றிலும், புதர்மண்டி இருக்கிறது. தடுப்பூசி போட வரும் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.- சஞ்சீவ், தொப்பம்பட்டி. புதர்மண்டிய பயணிகள் நிழற்குடை
கணபதி, சி.எம்.எஸ்., ஸ்கூல் பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை போதிய பராமரிப்பின்றி உள்ளது. நிழற்குடையை சுற்றிலும் புதர் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. பயணிகள் சிரமப்படுகின்றனர்.- தங்கவேல், கணபதி. தெருநாய் தொல்லை
ஆவாரம்பாளையம், பாலசுந்தரம் நகர், 15க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. இரவில், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இரவு முழுவதும் கத்திக்கொண்டே இருக்கும் நாய்களால், நிம்மதியாக துாங்க முடியவில்லை.- செல்வராஜ், ஆவாரம்பாளையம். மூச்சு முட்டுது
வெள்ளானைபட்டியில் பல நுாற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. நுாற்பாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு பஞ்சுகளை திறந்த வெளியில் எரிக்கின்றனர். அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு புகை பரவுகிறது. குடியிருப்புவாசிகள், கண்ணெரிச்சல், இருமல் போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.- பழனிச்சாமி, வெள்ளானைபட்டி. வேகத்தடை வேண்டும்
மருதமலை மெயின் ரோடு, கல்வீரம்பாளை யம் முதல் இ.பி.,பேருந்து நிலையம் வரையுள்ள ரோட்டில், பேங்க் ஆப் இந்தியா எதிரே வளைவில், அடிக்கடி விபத்து நடக்கிறது. அபாயகரமான வளைவில் வரும் வாகனங்களை கட்டுப்படுத்த, வேகத்தடை அமைக்க வேண்டும்.- முத்துக்குமார், வடவள்ளி. குழிகளால் விபத்து
வெங்கிட்டாபுரம் முதல் லுானா நகர் வரை, சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பழுதடைந்த சாலையால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையில் உள்ள குழிகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.- ராஜசேகர், வெங்கிட்டாபுரம். சீரற்ற குடிநீர் விநியோகம்
தெலுங்குபாளையம், 76வது வார்டு, சி.பி.எம்., நகரில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. போதிய தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். சீரான இடைவெளியில் தண்ணீர் விநியோகிக்க, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.- பாலமுருகன், தெலுங்குபாளையம். பழைய சாலை மீதே புதிய சாலை
சிங்காநல்லுார், ஜோதி நகர், 13வது வீதியில் புதிய தார் சாலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதில், இரவோடு இரவாக பழைய சாலையை தோண்டாமல், புதிய சாலையை அமைத்துள்ளனர். அரசின் உத்தரவை மீறிய ஒப்பந்ததாரர், மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தாமோதரன், சிங்காநல்லுார்.