கோவை: புனேவை தலைமையிடமாகக் கொண்ட, அகில இந்திய மத்திய அரசு ஓய்வூதியர் சங்க மாநாடு, வடகோவை குஜராத் சமாஜில் நடந்தது. தற்போது பெற்றுவரும் மாதாந்திர மருத்துவப்படியை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், மருத்துவப்படி உயர்வு, ஊதியக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொருளாளர் சந்திரமோகன், ஆண்டறிக்கை, நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். செயல் தலைவர் சுதாகரன், அமைப்புச் செயலர் வெங்கடாசலம் உட்பட தபால் ஆர்.எம்.எஸ்., - பி.எஸ்.என்.எல்., இந்திய அச்சகத்துறை, அகில இந்திய வானொலி, ரயில்வே, பாஸ்போர்ட், இந்திய சர்வே மத்திய நீர் வாரியம் என பல துறைகளைச் சார்ந்த, 350க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். 70, 75, 80, 85, 90 வயது நிறைவு பெற்ற 85 மூத்த ஓய்வூதியர்களுக்கு, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. தலைவராக சீனிவாசன், செயலாளராக பஞ்சநாதன், பொருளாளராக சந்திரமோகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர் மணி நன்றி கூறினார்.