சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க மாநகராட்சியில் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு
கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க, ரூ.1.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, ஆண்களுக்கு இரண்டு செட் சீருடை, ஒரு ஜோடி செருப்பு, தொப்பி, பெண்களுக்கு இரண்டு பாலியஸ்டர் சேலை, ஜாக்கெட் துணி, ஒரு ஜோடி செருப்பு, தொப்பி ஆகியவை வழங்கப்படும். சீருடை துணிகள் அரசு துறை நிறுவனங்கான கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ், தேசிய பஞ்சாலை கழகம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.மண்டல அலுவலகங்கள், வ.உ.சி., பூங்கா, பாதாள சாக்கடை பணி, நகர் நல மையங்கள் மற்றும் மருந்தங்கள் என, 2,083 நிரந்தர துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், ஆண்கள் - 1,339, பெண்கள் - 744. இவர்களுக்கு சீருடை வாங்கவும், தையல் கூலி வழங்கவும் உத்தேசமாக ரூ.75 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.இதேபோல், பாதுகாப்பு உபகரணங்களாக முக கவசம், கையுறை, தொப்பி, மிளிரும் ஜாக்கெட், கம்பூட்ஸ். கட் ஷூ மற்றும் பேக், சோப்பு உள்ளிட்டவை வழங்கப்படும். இதற்கு, 40 லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. இவ்விரு செலவினத்தையும் மாநகராட்சி பொது நிதியில் செலவிட, மன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
கல்வி நிதியில் ஹாக்கி மைதானம்
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி பாதியில் முடங்கியிருக்கிறது. செயற்கை புல்வெளி தளத்துடன் பணியை முழுமையாக முடிக்க திருத்திய திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், மாநகராட்சி கல்வி நிதியில் ரூ.9.67 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியிருக்கிறது.