ஒதுக்கீடு மூன்று லட்சம் வருவது ஒரு லட்சம் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு
அன்னுார்; கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீட்டை விட குறைவாக தண்ணீர் வருவதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில், 709 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் வழியோர கிராமங்களுக்கான குடிநீர் திட்டம் ஆகியவற்றின் வாயிலாகவும், போர்வெல்கள் வாயிலாகவும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை முன்னதாகவே துவங்கியுள்ளது. கடும் வெப்பம் வீசி வருகிறது. மழை மிகவும் குறைவாக உள்ளது. இதையடுத்து குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து கெம்பநாயக்கன் பாளையம் மக்கள் கூறுகையில்,' காரேகவுண்டம்பாளையம் ஊராட்சியில் வழக்கமாக குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் குடிநீர் மூன்று லட்சம் லிட்டருக்கு பதில் ஒரு லட்சம் லிட்டர் மட்டுமே வருகிறது.இதனால் வீடுகளுக்கு மிகத் தாமதமாகவே குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் நீண்ட தொலைவு சென்று இருசக்கர வாகனத்தில் குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது.ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை விட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குறைவாகவே ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த ஒதுக்கீட்டிலும் மிகக் குறைவாகத்தான் குடிநீர் வருகிறது. இதேபோல் பல ஊராட்சிகளில் குடிநீர் வடிகால் வாரியம் நிர்ணயித்ததை விட மிகக் குறைவான அளவில் நீர் வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட அளவு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.