மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
26-Jul-2025
கோவை; ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு, கோவையிலுள்ள அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடி வெள்ளியில் அம்பாளுக்கு, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்து, வழிபட்டால் சுபிட்சம் ஏற்படும். அனைத்து வளங்களும் வந்து சேரும். ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் தங்க கவசத்தில் சிகப்பு ரோஜா மற்றும் வெள்ளை சம்பங்கி மஞ்சள் செவ்வந்தி பூக்களை, மாலைகளாக தொடுத்து தாமரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இளஞ்சிகப்பு பட்டாடையில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பேரூர் மூலக்கரையில் உள்ள, ஸ்ரீ அலமேலு மங்கை கோவிலில், தாயாருக்கு ஒரு லட்சத்து எட்டு வளையல்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர். காட்டூர் நாகப்பன் வீதியில் உள்ள, ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு செவ்வந்தி மற்றும் மல்லிகை பூக்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள், அன்னபூர்னேஸ்வரி அம்பாள் கோவில்களில், சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. பெரியகடைவீதி மாகாளியம்மன், கோனியம்மன், அவிநாசி சாலை தண்டுமாரியம்மன், தர்மராஜாகோவில் வீதி காளியம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் அம்பாளையும், அம்மனையும் தரிசித்தனர். கோனியம்மன் கோவிலில் தானிய கூழ் தயாரித்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
26-Jul-2025