உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மணீஸ்வரர் கோவில் மரம் வெட்டி சாய்ப்பு! பக்தர்கள் அதிருப்தி

அம்மணீஸ்வரர் கோவில் மரம் வெட்டி சாய்ப்பு! பக்தர்கள் அதிருப்தி

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவிலில், வருவாய்துறை அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டியில் ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த அம்மணீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பழமையான வேப்பமரம் இருந்தது. இந்த மரம் முறையான அனுமதியின்றி வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், இந்த பிரச்னை குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.இதற்கு சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, 'மரம் வெட்டியது குறித்து விசாரிக்கப்படுகிறது,' என்றார்.இந்நிலையில், டி. கோட்டாம்பட்டி பொதுமக்கள், மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சியில், நான்கு வழிச்சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது, கோவில்களில் உள்ள மரங்களும் அனுமதியின்றி வெட்டப்படுகின்றன. டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவிலில், பழமையான வேப்பமரத்தை பக்தர்கள் தெய்வமாக வணங்கி வந்தனர்.திருமணமாகாதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள் வேப்பரமத்தை சுற்றி வழிபடுகின்றனர். இந்நிலையில், கடந்த, 20ம் தேதி அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், முறையான அனுமதியின்றி அந்த மரத்தை வெட்டி விற்பனை செய்துள்ளார்.இது கோவில் நிர்வாகத்துக்கு தெரிந்து தான் நடந்ததா என விளக்க வேண்டும். இந்த சம்பவம், பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இதற்கு முன், இந்த கோவிலில் இருந்த பழமை வாய்ந்த வில்வமரமும் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது.எனவே, மரத்தை வெட்டியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டு, சப் - கலெக்டருக்கு ஆய்வு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதி வழங்கவில்லை

கோவில் அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் கூறுகையில், ''கோவில் செயல் அலுவலர், தாசில்தாரிடம் மரம் வெட்ட அனுமதி கோரினார். தாசில்தாரிடம் இருந்து வந்த கடிதத்தை செயல் அலுவலர் எனக்கு அனுப்பினார். அதன்பின், மரம் வெட்டப்பட்டது. பைரவர் சன்னதி கட்டுவதற்காக மரம் அகற்றப்பட்டுள்ளது,'' என்றார்.பொள்ளாச்சி தாசில்தார் மேரிவினிதா கூறுகையில், ''பழமையான மரம் என்பதால் மதிப்பு அதிகமாக உள்ளதால், சப் - கலெக்டருக்கு பரிந்துரை செய்த கடிதம் மட்டுமே, செயல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிந்துரை செய்த கடிதத்தையே, அனுமதி கடிதம் என தவறாக நினைத்து வெட்டியதாக தெரிகிறது.இது குறித்து விசாரணை செய்து, மரம் வெட்டியதற்கு கோவில் செயல் அலுவலருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை