உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.ஐ.ஆர்., பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் சிக்கல்

 எஸ்.ஐ.ஆர்., பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் சிக்கல்

பந்தலுார்: அங்கன்வாடி ஊழியர்கள், எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால், குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 486 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதில், 138 மையங்களில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. தற்போது, இந்த மையங்களின் பணியாளர்கள், எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பராமரிக்கவும், உணவு வழங்கவும் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்த மையங்களில் குழந்தைகளை, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பாதுகாப்பில் வைக்கவும், பள்ளி சத்துணவு மையங்களில் உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்கவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், 'சத்துணவு மையங்களில் பெரிய மாணவர்கள், உட்கொள்ளும் உணவுகளை குழந்தைகளுக்கு எவ்வாறு கொடுக்க முடியும்,' என, பல பெற்றோர் கேள்வி எழுப்பி உள்ளனர். இத்தகைய காரணங்களால் அங்கன்வாடி மையங்களுக்கு செல்லும் குழந்தைகள், பாதிக்கப்பட்டு உள்ளதுடன், பெற்றோர் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் கூறுகையில், 'உதவியாளர் இல்லாத அங்கன்வாடி மைய பணியாளர்களை, எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை